இந்தியா

”கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் இந்தியர்கள் அனைவருக்கும் கிடைக்கும் ”- பிரதமர் மோடி உறுதி!

கொரோனா பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், இந்தியர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், அது இந்தியர்கள் அனைவருக்கும் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். தடுப்பூசி குறித்த பணிகளை தேசிய வல்லுநர் குழு கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி அனைத்து மக்களையும் சென்றடைவதற்கு மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி தற்போது பரிசோதனை கட்டத்திலேயே இருக்கிறது. தடுப்பூசியை மக்களுக்கு எப்படி விநியோகிக்க வேண்டும் என்பதை வல்லுநர்கள் குழு நிர்வகிப்பார்கள்’ என தெரிவித்தார் .