இந்தியா

காஷ்மீரில் 3 பாஜக தொண்டர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த 3 நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தில் நேற்று மாலை ஓய்.கே. போரா என்ற இடத்தில் இருந்து பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் உமர் ரஷீத் பெய்க் மற்றும் நிர்வாகிகளான உமர் ரம்ஜான் ஹஸம், ஃபிடா ஹூசேன் யாது ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் பயங்கரவாதக் குழுவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.