தமிழ்நாடு

முக்கியத்துவமற்ற பதவியில் 7 ஆண்டுகளாக வைத்திருந்ததால் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பம்…

தமிழக ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த சகாயம், முதலில் தமிழக அரசின் சிறிய துறைகளில் பணியாற்றி, பின்னர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் பணிக்கு தேர்வானவர். இவர் தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

சகாயம் ஐஏஎஸ்-க்கு கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு முக்கிய பதவிகளை வழங்கவில்லை எனவும் இதனால் அவர் கடும் மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது விருப்ப ஓய்வு பெற கேட்டு விண்ணப்பித்துள்ளார். இவரது பணி காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன.

சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, கிரானைட் ஊழலை வெட்ட வெளிச்சமாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் நேர்மையை கண்ட இளைஞர்கள் பலர், அவருடைய வழிகாட்டலில் இயங்க இயக்கமாக செயல்பட்டு வருகிறார்கள். இடையில், சகாயம் ஐஏஎஸ் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .