தமிழகத்தில் பள்ளிகள் திறக்க தற்போதைக்கு சாத்தியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லக்கம்பட்டி பேரூராட்சியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி ரூ 1.79 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜையுடன் பணியை தொடங்கிவைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தையும் திறந்துவைத்தாா்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் ஆளுநரே முதல்வரை பாராட்டினார் என்றார். பள்ளிகள் திறப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தற்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை என்றார். மேலும், திறந்தவெளியில் பள்ளிகள் திறந்தால் வெயில் பனி போன்றவற்றால் மாணவர்கள் உடல் சரியில்லாமல் போய்விட்டால் யார் பார்ப்பது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் இதுவரை 5.25 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். அதேபோல், நேற்று ஒரே நாளில் நீட்த்தேர்வு பயிற்சி மையத்தில் சேர 20 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த 7 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்கின்றனர். தொடர்ந்து மாணவர்கள் வகுப்புக்கு வந்து பாடம் கற்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளும் ஆலோசித்து வருகின்றனர். எனினும், நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பது தொடர்பாக, முதலமைச்சர் அறிவிக்கும் அறிவிப்பில்தான் தெரியும் என தெரிவித்தார்.