அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தின் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம் : இன்று முதல் அமலுக்கு வருகிறது

கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்காரணமாக, தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த 5,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதனையடுத்து, ஊரடங்கு அமலில் இருந்தபோது, மே 7-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளின்படி சென்னை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள 3,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்பட்டு வந்தது .

இந்நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.