அரசியல்உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் – இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் டிரம்பும், ஜோ பைடனும்

அமெரிக்காவில் நாளை நடக்கும் அதிபர் தேர்தலில் எதிர் எதிராக மோதும் டிரம்பும், ஜோ பைடனும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.

46 ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக அமெரிக்காவில் நாளை தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக, தற்போதைய அதிபராக இருக்கும் டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார் .

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் கடந்த தேர்தலைகளை ஒப்பிடும் போது அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகுந்தஆர்வம் காட்டிவருகின்றனர். இதன் காரணமாக ஏற்கனவே 8 கோடியே 50 லட்சம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்தி விட்டனர்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய மாநிலமாக விளங்கும் பென்சில்வேனியாவில் 4 பிரசார பேரணிகளில் டிரம்ப் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மிச்சிகனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2 பிரசார பேரணிகளில் பங்கேற்றார். இந்தப் பேரணிகளில் முன்னாள் அதிபர் ஒபாமாவும் கலந்து கொண்டு ஜோ பைடனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும்,நிறவெறியை ஒடுக்குவதிலும் டிரம்ப் தோல்வி அடைந்து விட்டதாக ஜோ பைடன் தரப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நடந்த டிரம்பின் தேர்தல் கூட்டங்கள் காரணமாக 700 பேர் வரை கொரோனாவால் இறந்திருக்கலாம், 30 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் போன்ற புள்ளி விவரங்கள் டிரம்பின் பிரச்சாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து முன்னணி பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களான பென்சில்வேனியா, விஸ்கோன்சின், புளோரிடா, அரிசோனா ஆகியவற்றில் ஜோ பைடனுக்கு பெரும் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.