மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு-உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆளுநர், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தக் கோரிய வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அக்டோபர் 29-ம் தேதியே தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது என்றும், வெள்ளிக்கிழமை ஆளுநரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டார் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பது நீதிமன்றத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள் மனுதாரர்கள் மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமாருக்கும் பாராட்டு தெரிவித்து, வழக்கின் தீர்ப்பிற்காக தள்ளி வைத்தனர்.