இந்தியா

காஷ்மீரில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை !

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த தேடப்படும் முக்கிய பயங்கரவாதியான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவரான சைப்ஃபுல்லாவை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பயங்கரவாத ஊடுருவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. மேலும் அவ்வப்போது பாதுகாப்புப் படையினர் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே பயங்கரவாத அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தும் வகையில் காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு எல்லையில் ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஜனவரி முதல் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்களை களை எடுக்கும் பணிகளில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பலனாக இதுவரை நுற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீரின் ரன்கியாத் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காஷ்மீர் காவல்துறையினரின் உதவியுடன் அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளின் நிலையை சுற்றி வலைத்தனர். இதனை அறிந்த பயங்கரவாதி பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அங்கிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தலைவர் சைப்ஃபுல்லா என்பது தெரியவந்தது. காஷ்மீரின் மலாங்போரா பகுதியை சேர்ந்த இந்த பயங்கரவாதி, ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பின் கமாண்டராக இருந்த ரியாஸ் நயாக் கொல்லப்பட்டபின், அவரின் இடத்தில் சைப்ஃபுல்லா கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்துள்ளார். மேலும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் அமைப்பில் சேர்த்ததோடு பல்வேறு பயங்கரவாத செயல்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தலைவரான சைப்ஃபுல்லா கொல்லப்பட்டது இந்திய ராணுவத்துக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.