அரசியல்உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு

உலகின் சக்தி வாய்ந்த மனிதரை தேர்ந்தெடுக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை பல்வேறு மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் அதிபரும் குடியரசுக்கட்சி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் ஆகிய 5 மாகாணங்களில் வாக்குகளை திரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது பேசிய ட்ரம்ப், பைடன் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சீனாவும் பெரும் தொழில் நிறுவனங்களும் சில ஊடகங்களும் மட்டுமே விரும்புவதாக தெரிவித்தார்.

பைடன் அதிபரானால் அவரை தங்கள் விருப்பப்படி கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் நினைப்பதே இதற்கு காரணம் என்றும் ட்ரம்ப் கூறினார். பைடன் அதிபரானால் அமெரிக்காவை சீனா விலைக்கு வாங்கிவிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.

மறுபுறம் பென்சில்வேனியா, ஒஹயோ மாகாணங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். ட்ரம்ப்பை தோற்றுப்போனவர் என வர்ணித்த பைடன், அமெரிக்கர்களை மோதவிட்டு பிளவு உண்டாக்க முனைந்தவர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

ட்ரம்ப்பை மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் இது என்றும் அவ்வாறு செய்தால்தான் எதிர்கால அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும் என்றும் பைடன் பேசினார். தாம் ஆட்சிக்கு வந்தால் கொரோனா விரைவாக கட்டுப்படுத்தப்படும் என்றும் அதற்கான தடுப்பூசி இலவசமாக போடப்படுவதுடன் சிகிச்சையும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார். தற்போதைய நிலையில் கருத்து கணிப்புகள் பைடன் வெல்லவே வாய்ப்பு அதிகம் என கூறி வருகின்றன.

1992-ஆம் ஆண்டு தேர்தலில் அதிபராக களம் கண்ட ஜார்ஜ் புஷ் தோற்றுப்போனார். அதன் பின் வேட்பாளராக களம் இறங்கிய அதிபர் எவரும் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் அது முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வெற்றி யாருக்கு என்பது நாளை தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் தேர்தல் முடிவில் இழுபறி ஏற்பட்டால் அதையும் சந்தித்து நீதிமன்றங்களுக்கு செல்வதற்கு இரு தரப்பும் ஏற்கனவே வழக்கறிஞர்களுடன் தயார் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது