உலகம்

துருக்கியில் நிலநடுக்கத்தின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

துருக்கியில் நிலநடுக்கத்தின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ள நிலையில், கட்டட இடிபாடுகளுக்கு நடுவே போராடிய 3 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் கிரீசின் அருகே உள்ள ஏஜியான் கடல் பகுதியை மையமாகக் கொண்டு கடந்த 2 தினங்களுக்கு முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7 ஆகப் பதிவான நிலநடுக்கம் காரணமாக துருக்கியின் 3வது பெரிய நகரமான இஸ்மிர் நகரில் பலத்த சேதம் ஏற்பட்டது. வீடுகள், அலுவலகம் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் பீதியடைந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இஸ்மிர் நகரில் பல அடுக்குமாடி கட்டடங்கள் அடியோடு சாய்ந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர்.

இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 91 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் 65 மணி நேரமாக சிக்கித் தவித்த எலிஃப் பெரின்செக் என்ற பெயர் கொண்ட 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.