Uncategorized

இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் இடையே நாளை மறுநாள் எட்டாம் கட்டப் பேச்சுவார்த்தை

பதற்றம் நிறைந்த லடாக் எல்லைப் பிரச்சனையில் சுமுக தீர்வு காண்பதற்காக, இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே எட்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க இருநாட்டு ராணுவ தளபதிகளுக்கு இடையே எட்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜே. கே. மேனன் முதன்முறையாக புதிய கமாண்டராக லே பகுதிக்குப் பொறுப்பேற்று இந்த பேச்சுவார்த்தைக்கு இந்தியா சார்பில் தலைமை தாங்க உள்ளார். கடந்த அக்டோபர் 12ம் தேதி ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சீனா தனது படைகளை திரும்பப் பெற்று ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலைப்பாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இதனை சீனா ஏற்க மறுத்தபோதும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட ஒப்புதல் அளித்தது.

லடாக் எல்லைப்பகுதியில் இருதரப்பிலும் தலா 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். குவியலான ஆயுதங்கள், பீரங்கிகள் போர் விமானங்கள் எல்லையின் இருபுறமும் வட்டமிடுவதால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

சில பகுதிகளில் மட்டும் படைகளை விலக்க சீனா ஒப்புக் கொண்ட போதும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா உறுதியுடன் வலியுறுத்தி வருகிறது