உத்தரகண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி ; 84 பள்ளிகள் மூடப்பட்டன
உத்தரகண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்த மாநிலத்தில் 84 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. எனினும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தொற்று குறைந்த பகுதிகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஒருசில மாநிலங்கள் தொற்று குறைந்த பகுதிகளில் பள்ளிகளைத் திறந்துள்ளன.
அந்தவகையில் உத்தரகண்ட் மாநிலத்தில் தொற்று பரவல் குறைந்து காணப்பட்ட மண்டலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், 80 ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஐந்து மண்டலங்களைச் சேர்ந்த 84 பள்ளிகளை மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், உத்தரகண்டின் 13 மாவட்டங்களில் பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆந்திரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது உத்தரகண்ட் மாநிலத்திலும் பள்ளி ஆசிரியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.