IPL - 2020விளையாட்டு

விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பறிக்க வேண்டும் – முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் காட்டம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு ஐபிஎல் தொடரிலும் பிளே ஆப் சுற்றோடு வெளியேறியுள்ளது. இந்நிலையில், பெங்களூரு அணியின் கேப்டனாக 8 ஆண்டுகளாக உள்ள விராட் கோலியை, கேப்டன் பொறுப்பில் இருந்து அணி நிர்வாகம் நீக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து கூறியதாவது : ஆர்சிபி அணியின் வெற்றி, தோல்விகளுக்கு விராட் கோலி பொறுப்பேற்க வேண்டும். எட்டு வருடங்களாக விளையாடியும் ஐபிஎல் கோப்பையை அவரால் பெற்றுத் தர முடியவில்லை.

எட்டு வருடங்கள் என்பது நீண்ட காலம். வேறு எந்த கேப்டனாவது எட்டு வருடங்கள் விளையாடி கோப்பையைப் பெற்றுத் தராமல் இருந்திருந்தால் அவரால் அதே அணியில் கேப்டனாக இருந்திருக்க முடியுமா? எனவே இதற்கு கோலி பொறுப்பேற்க வேண்டும். ஒரு வருடம் மட்டும் சரியாக விளையாடவில்லை என்பதற்காகச் சொல்லவில்லை. ஆனால் நடந்ததற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அஸ்வினுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். இரண்டு வருடங்களாக அவரால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத் தர முடியவில்லை. உடனே அவரை நீக்கிவிட்டார்கள். டோனி, ரோகித் சர்மா, கோலி பற்றி பேசுகிறோம். டோனி மூன்று முறையும் ரோகித் சர்மா நான்கு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்கள். அதனால் தான் அவர்களால் நீண்ட நாளாக கேப்டனாக இருக்க முடிகிறது. எட்டு வருடங்களாக ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத் தந்திருக்காவிட்டால் ரோகித் சர்மாவையும் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியிருப்பார்கள். கேப்டன் என்ற முறையில் பாராட்டுக்களை பெற்றுக்கொள்ளும் போது விமர்சனங்களையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார் .