அரசியல்உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜியா மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜியா மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், கடந்த 3ம்தேதி வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கடந்த 5 நாட்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றாலும், இன்னும் முழுமையாக முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

மொத்தம் உள்ள 538 எலக்டோரல் (Electoral) வாக்குகளில் 270 வாக்குகளை பெறுபவர்கள், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 வாக்குகளை பெற்று வெற்றியை நெருங்கிவிட்டார். குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கு 214 வாக்குகளே, தற்போது வரை கிடைத்துள்ளன.

இந்நிலையில் ஜார்ஜியா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, நெவாடா, அலாஸ்கா ஆகிய 5 மாகாணங்களில் இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதில் நெவாடாவில் மட்டும் முன்னிலையில் இருந்த ஜோ பைடன், தற்போது பென்சில்வேனியா மாகாணத்தையும் தன்வசப்படுத்தியுள்ளார். மற்ற இரு மாகாணங்களான வடக்கு கரோலினா மற்றும் அலாஸ்காவில் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். இதனால் ஜோ பைடனின் வெற்றி உறுதியாகியுள்ளது. அதேநேரம், இந்த தேர்தலில் முதல் முறையாக ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.