ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி : இந்திய ராணுவம் முறியடிப்பு
ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியே இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் மேற்கொள்ள இருந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
மசில் டெக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில் ராணுவ வீரர்கள் சனிக்கிழமை நள்ளிரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கியால் சுடவே இருதரப்புக்கும் சண்டை மூண்டது.
இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், ஒரு ஏ.கே. ரக ரைபிள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.