இந்தியா

இதுவரை இல்லாத அளவில் காற்று மாசுபாட்டை எட்டியது டெல்லி..

டெல்லியில் தற்போதைய குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவாக காற்று மாசு கடுமையான நிலையை எட்டியுள்ளது. காற்று தர குறியீடு அளவு ஆனந்த் விகார் பகுதியில் 484-ஆகவும், முன்ட்கா பகுதியில் 470-ஆகவும் பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் மிக மோசமான அளவு என்ற நிலையில் இருந்து கடும் மோசமான அளவு என்ற நிலையை காற்று மாசு எட்டியிருக்கிறது.

இதனால் டெல்லி நகரமே பனிமூட்டத்தால் மூடப்பட்டது போல காட்சியளித்தது. அக்ஷர்தாம் கோயிலே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. காற்று மாசு மேலும் அதிகரிக்காமல் இருக்க தீபாவளியை ஒட்டி பட்டாசு வெடிக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டு 600 கிலோ பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காற்றுமாசு காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்கும் என டெல்லி அரசு கவலை தெரிவித்துள்ளது.

மேலும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். காலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு புகை படர்ந்திருந்தது. வாகன ஓட்டிகள் மிகவும் மெதுவாக வாகனங்களை இயக்கினர். கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ள சூழலில் காற்று மாசும் டெல்லி மக்களை வதைத்து வருகிறது.