தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, தடையை மீறி ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வதற்கான தடை உத்தரவு அமலில் உள்ளதாக ரயில்வே நிர்வாகத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்லும் பட்சத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் மூலம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தடையை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால், ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164ன் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.