அரசியல்தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஸ்டாலின் நீலி கண்ணீர் வடிக்க வேண்டாம் – அமைச்சர் சி.வி.சண்முகம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், ஸ்டாலின் நீலி கண்ணீர் வடிக்க வேண்டாம், என அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு பகுதியில், 263 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு, அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களகளை சந்தித்தார். அப்போது, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மீது, உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க, தமிழக அரசு முயற்சித்து வருவதாகவும், நீதிமன்ற விவகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது, என்ற அடிப்படை கூட தெரியாமல் பேசுவது தான் ஸ்டாலின் வழக்கம் என தெரிவித்தார் .

மேலும் பேசிய அவர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசுவதற்கு திமுகவிற்கும், கருணாநிதியின் குடும்பத்தாருக்கும் எந்தவித தார்மீக உரிமையும் தகுதியும் இல்லை என கடுமையாக விமர்சித்த அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக ஆட்சியின் போது பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக்கூறியவர் கருணாநிதி என பேசினார்.

ஏழரை சதவீத இட ஒதுக்கீட்டை அரசாணை மூலம் நிறைவேற்றியவர் தமிழக முதல்வர் எனவும், ஆளுநரை எதிர்த்து போராட்டம் என்று சொன்ன ஸ்டாலின், ஆளுநர் அழைத்து மிரட்டிய பின்பு போராட்டத்தை வாபஸ் பெற்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அமைச்சர் இறப்பில் அரசியல் செய்பவர்கள் கேவலமானவர்கள் என அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்தார்.