பட்டாசு தொழிலாளர்களுக்கு நலவாரியம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழ்நாட்டில், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு என, தனி அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, அந்தந்த மாநில முதல்வர்களை, வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருப்பதாக கூறினார்.
பட்டாசு தொழிலாளர்களுக்கும், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கும் என, தனி அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.
மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை உள்ளதாலேயே, வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விளக்கம் அளித்தார். வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் விருப்பப்படியே, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தாம் பிறப்பிலேயே விவசாயி என்றும், தன்னை விமர்சிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளை எதிர்க்கட்சித் தலைவர் கொச்சைப்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.