அரசியல்தமிழ்நாடு

ரூ.328 கோடி மதிப்பில் 29 புதிய திட்ட பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் 328 கோடி ரூபாய் மதிப்பிலான 29 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 22 கோடியே 38 லட்சம் மதிப்பில் செயல்படுத்தி முடிக்கப்பட்ட 16 பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மேலும் 15 ஆயிரத்து 792 பயனாளிகளுக்கு 37 கோடியே 55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்

நிகழ்ச்சியில் வல்லநாடு அருகே ரவுடிகளால் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியத்தின் மனைவி புவனேஸ்வரியிடம் அரசு பள்ளியில் ஜூனியர் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு ஆணையையும், 50 லட்ச ரூபாய் காசோலையையும் முதலமைச்சர் வழங்கினார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.

முன்னதாக, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்ற முதலமைச்சர், அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு 16-கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள பல்வேறு புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் லீனியர் அசிலெரட்டேர் (Linear Accelerator) எனப்படும் மருத்துவ நேரியல் முடுக்கி கருவியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 71 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மத்திய ஆய்வக புதிய கட்டிடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.