அரசியல்தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஒரு மாதத்தில் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2000 மினி கிளினிக் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், ஒவ்வொரு தொகுதிக்கும் 5 அல்லது 6 மினி கிளினிக் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஒரு மாதத்தில் இவை தொடங்கப்பட்டு, மாலை நேரங்களில் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து விருதுநகரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, அந்தந்த மாநில முதலமைச்சர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருப்பதாக கூறினார்.

பட்டாசு தொழிலாளர்களுக்கும், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கும் என, தனி அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.