இந்தியா

இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் வரை பலி என தகவல்

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள், பொதுமக்களில் 3 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்திய ராணுவத்தின் பதிலடியால், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் முறியடிக்கப்பட்டது.

காஷ்மீர் பகுதிகளான பூஞ்ச், உரி, கெரன் செக்டர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மூவர் மரணம் அடைந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் உறுதி செய்கின்றன.

இந்தியப் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்,

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் இழப்பு எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பாகிஸ்தான் ராணுவ தரப்பில் தாக்குதல் நடந்ததால் எதிர் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.