தமிழ்நாடு

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. முதல்கட்டமாக 7.5% உள் ஒதுக்கீடு அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.

2021 – 21 ஆம் கல்வி ஆண்டின் மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திங்களன்று வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை வருவாய், சுகாதாரம், விளையாட்டு மற்றும் காவல் துறையினர் செய்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாணவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் அலுவலருக்கும் இடையே கண்ணாடித் தடுப்புகள், பெற்றோர் அமரும் இடம், உணவு அருந்தும் இடம் என தனித்தனி பகுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு நேரு விளையாட்டரங்க கதவு திறக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். முதல்கட்ட கலந்தாய்விற்கு பொதுப்பிரிவினர் அழைக்கப் பட்டுள்ளனர்.

7.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்கள் 45 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனுமதி ஆணையை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.