அரசியல்இந்தியா

விரைவில் தரவுப் பாதுகாப்பு சட்டம் – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி

நாட்டில் விரைவில் தரவுப் பாதுகாப்பிற்கு சட்டம் இயற்றப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கர்நாடக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார்.

மாநாட்டில் உரையாற்றிய அவர்,“தரவுப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய மையமாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தொற்றுநோய் காலத்தின்போதும் கூட தகவல் தொடர்புத் துறை ஏழு சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டதாகவும், முக்கிய உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து குறிப்பிடத்தக்க முதலீடுகளைப் பெற்றதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

இந்தியா மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் தரவுகளை உருவாக்கும் மையமாக உள்ளது. நாட்டில் மிக விரைவில் தரவுப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும்” என ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்தார்.