நடப்பாண்டில் 32 லட்சம் மெட்ரின் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது! – முதல்வர் பழனிசாமி
நீர் மேலாண்மையில் தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக நடப்பாண்டில் அரசு கொள்முதல் நிலையங்களில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகிலுள்ள வனவாசியில் இருக்கும் அரசினர் பல தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் தமிழக முதலமைச்சர் பங்கேற்றார். ரூ.123.56 மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை விழாவில் முதலமைச்சர் திறந்து வைத்தார். ரூ.118.93 லட்சம் மதிப்பிலான 44 புதிய திட்டபணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியின்போது பேசிய முதலமைச்சர், அதிமுக அரசின் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக ரூ.3,060 பேர் கூடுதலாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு உருவாகி இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் காரணமாக தமிழகத்தில் உயர் கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய வரலாற்றில் வேறு எந்த மாநிலத்திலும் ஒரே ஆண்டில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்த சரித்திரம் கிடையாது என்றும் இதன் மூலம் தமிழக அரசு சரித்திர சாதனை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நீர் மேலாண்மை துறையில் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை செய்ததன் மூலம் ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் பாதுகாக்கப்பட்ட தாகவும், இதனால் டெல்டா மாவட்டங்களில் கால்வாய் ஏரிகள் தூர்வாரப்பட்டு நீர் சேமித்து அதன் மூலம் பயிர் சாகுபடி அதிகரித்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
நடப்பாண்டு 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து நிலையில் நீர் மேலாண்மையின் காரணமாக அரசு கொள்முதல் நிலையங்களில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.