அரசியல்தமிழ்நாடு

சென்னை வந்தடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் துணை முதல்வர் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க சென்னைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தடைந்தார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து வரவேற்றார்.

தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அமித்ஷா இன்று காலை 10.50 மணிக்கு டெல்லியிலிருந்து தனிவிமானத்தில் சென்னை புறப்பட்டார். மதியம் 2 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார்.

தமிழகம் வந்த அமித்ஷாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று வரவேற்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, சிவி சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

விமானநிலையத்திலிருந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் சென்றார். அப்போது வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். சாலையோரம் இருந்த பாஜக தொண்டர்களை பார்த்த அமித்ஷா காரிலிருந்து இறங்கினார். பின் தொண்டர்களை நோக்கி கை அசைத்தவாறு சாலையில் நடந்து சென்று அவர்களை உற்சாகப்படுத்தினார்.

நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித்ஷா அங்கிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கலைவாணர் அரங்கத்திற்கு வருகிறார். அங்கு திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ 380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.