தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தலுக்கு சிறப்பு முகாம் துவங்கியது

தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றுக்குப் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 16ஆம் நாள் வெளியிடப்பட்டது. அத்துடன் 2021 ஜனவரி முதல் நாளைத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், இறந்தோர் பெயரை நீக்கவும், வாக்காளர் விவரங்களில் திருத்தம் செய்யவும், தொகுதிக்குள்ளேயோ, பிற தொகுதிக்கோ பெயரை மாற்றிக்கொள்ளவும் தமிழகத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் வாக்குச்சாவடி அலுவலரால் பெறப்படும் விண்ணப்பங்கள், வாக்காளர் பெயர்ப் பதிவு அதிகாரிக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்பு முகாம்கள் நடைபெறுவதையொட்டி வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களைச் சேர்க்க அரசியல் கட்சிகள் சார்பில் வாக்குச்சாவடி அளவிலான குழுக்கள் பொதுமக்களுக்கு உதவி வருகின்றனர். இதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் இறந்தோர் பெயர்களை அடையாளம் கண்டு, அவற்றை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாக்காளர் பட்டியல் சரிபார்க்க டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தவிர டிசம்பர் 15 வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி அலுவலரிடமும், வாக்காளர் பதிவு அதிகாரியிடமும் நேரில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.nvsp.in/ , https://www.elections.tn.gov.in/ ஆகிய இணையத்தளங்களிலும் பெயர் சேர்த்தல், திருத்தம், இடமாற்றம் தொடர்பாக உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து ஜனவரி ஐந்தாம் நாள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.