அரசியல்தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் கே.பி. அன்பழகன்

தருமபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவையை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், கொடியசைத்து இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.கார்த்திகா தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியதாவது : காரிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது தொடங்கி வைப்பது தருமபுரி மாவட்டத்தில் 25-ஆவது ஆம்புலன்ஸ் சேவை வாகனம் ஆகும்.

இந்த வாகனம் காரிமங்கலம் சுற்றுவட்ட பொதுமக்கள் அவசரகால பயன்பாட்டிற்காக இயக்கப்படுபகிறது. தருமபுரி மாவட்டத்தில் சராசரியாக மாதத்தில் 2,500 பேர் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் மாதத்தில் சராசரியாக 850 பேரும், சாலை விபத்தில் 450 பேரும் அவசரகால சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் மேலும் இந்தத்திட்டத்தை விரிவு படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.