சினிமா

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி காலமானார்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 63

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தையாக முறுக்குமீசையுடன் கம்பீரமாக கருப்பன்சாமி அருள்வாக்குகூறும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பர் நடிகர் தவசி.

கிழக்கு சீமையிலே படம் முதல் ரஜினிமுருகன், சுந்தரபாண்டியன், மெர்சல், அண்ணாத்த உள்ளிட்ட 147 படங்களில் தவசி நடித்துள்ளார். முறுக்குமீசையுடன் கம்பீரமாக வலம் வந்த அவர், கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். சமீபத்தில் மருத்துவ செலவுக்காக உதவிக்கோரி, நடிகர் தவசி, சக நடிகர்களின் உதவி கேட்டு கண்ணீர் மல்க பேசிய வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைத்தது. அவரது நிலையை அறிந்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கினர்.

இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். அவருக்கு வயது 63. தவசியின் உடல் அவரின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.