“புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்”-அமைச்சர் தங்கமணி
நிவர் புயல் கரையை கடக்கும்போது முன்னெச்சரிக்கை ஏற்பாடாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் வரும் 25-ஆம் தேதி தீவிரப்புயலாக மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, “நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயாராக இருக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மின்கம்பங்கள் சேதம் அடைந்தால் அதை சீரமைக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
தேவையான மின்கம்பங்கள் கையிருப்பு உள்ளன. புயல் கரையை கடக்கும்போது முன்னெச்சரிக்கை ஏற்பாடாக மின்சாரம் துண்டிக்கப்படும். எவ்வளவு வேகமாக இருந்தாலும் எந்த இடங்களில் புயல் கரையை கடந்தாலும் மின் துறை தயாராக இருக்கிறது.
கஜா புயலையே எதிர்கொண்டு விட்டோம். அந்த அளவுக்கு இது பாதிப்பாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த முறை போலவே சிறப்பாக பணியாற்றுவோம். அதிக மழை பெய்யக்கூடும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.