தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 630 கிலோமீட்டர் , புதுச்சேரியில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நவம்பா் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து “நிவர் புயல்” தொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சா் ஆா்.பி. உதயகுமார், “அரக்கோணத்தில் இருந்து 6 தேசிய பேரிடர் மீட்புப் படைகள் கடலோர மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன. மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 36 வருவாய் மாவட்டகங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.