தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், புயலாகவும் மாறவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றின் சுழற்சி, அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கணிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே, தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலுவடைந்த பிறகு, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும், புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து வலுப்பெற்று புயல் சின்னமாக உருவானால், புரெவி என பெயர் வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன முதல் மிக கனமழை பரவலாக இருக்கும் என்பதை குறிக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதீத கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் 9 சென்டி மீட்டர் மழையும், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 8 சென்டி மீட்டர் மழையும், மதுரை வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.