உடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகத்திற்கு முதல் இடம்
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலம் என்ற விருதினை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 6-வது முறையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டமைக்காக மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாகவே தமிழ்நாடு மாற்றி வருகிறது என்றும், தமிழ்நாட்டில் இதுவரை 1392 கொடையாளர்களிடமிருந்து 8245 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா பெரும் தொற்று காலத்திலும் சிறப்பு நெறிமுறைகளை உருவாக்கி, 97 உடலுறுப்புகளை 27 உறுப்பு கொடையாளிகளிடமிருந்து பெற்று, தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தனது தலைமையிலான அரசு சாதனை படைத்து வருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.