அரசியல்இந்தியா

ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் வளர்ச்சி அடைய பாடுபட்டு அதில் வெற்றி கண்டவர் மறைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கிரண் மகேஸ்வரி – பிரதமர் மோடி புகழாரம்

பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி. மற்றும் ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதி எம்.எல்.ஏ.வான கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

பா.ஜ.க.வின் ராஜஸ்தான் பிரதேச மகளிர் அணி தலைவர், மகளிர் அணி தேசிய தலைவர், தேசிய பொது செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அவர் வகித்துள்ளார். உதய்பூர்-ராஜ்சமந்த் தொகுதியின் எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

பா.ஜ.க. தேசிய துணை தலைவராகவும் அவர் பதவி வகித்திருக்கிறார். கொரோனா தொற்றால் மரணம் அடைந்த கிரணுக்கு சத்ய நாராயண் என்ற கணவரும், ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கிரண் மகேஸ்வரிஜியின் திடீர் மறைவு அதிக வருத்தமளிக்கிறது.

ராஜஸ்தான் அரசில், எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ அல்லது கேபினட் அமைச்சராகவோ இருந்தபோது மாநில வளர்ச்சிக்கான பணிகளில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் வளர்ச்சி அடைய பாடுபட்டு அதில் வெற்றி கண்டவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.