எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூறுகிறேன் – ரஜினிகாந்த்
அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும், சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நடிகர் ரஜினிகாந்த், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்காக, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ரஜினி புறப்பட்டபோது, அங்கிருந்த ரசிகர்கள் அவரது காரின் மீது பூத்தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து காரில் கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்ற ரஜினியை அங்கும் ரசிகர்கள் திரண்டு, பூத்தூவி வரவேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் 38 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ரஜினி ரசிகர்கள், மக்கள் மன்றத்தை சேர்ந்த பலர் அங்கு வந்திருந்தபோதும், அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே உள்ளே அனுப்பப்பட்டனர். பவுன்சர்களும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
ரஜினி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி தொடங்குவது, சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு, தேர்தலில் போட்டியிட்டால் கிடைக்கக்கூடிய வாக்கு சதவீதம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
ரஜினி தனது முடிவை நாளை காலைக்குள் அறிவிக்க உள்ளதாகவும், கட்சி தொடங்குவது குறித்தே கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், ஆலோசனையில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து, மண்டபத்தின் மாடத்தில் இருந்து ரசிகர்களை பார்த்து உற்சாகம் பொங்க மகிழ்ச்சியோடு ரஜினிகாந்த் கையசைத்தார்.
பின்னர் போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவங்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை கூறியதாகக் குறிப்பிட்டார்.
தான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர் என்றும், தனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பதாகவும் ரஜினி தெரிவித்தார்.