அரசியல்தமிழ்நாடு

செம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

நிவர் புயலின் போது ஏற்பட்ட கனமழை காரணமாக செம்மஞ்சேரியில் சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செம்மஞ்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, ஒக்கியமேடு, முட்டுக்காடு முகத்துவாரம் ஆகிய இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்டார். செம்மஞ்சேரியில் மழை நீர் தேங்குவதை தடுக்க 583 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.

மேற்குத்தாம்பரம், வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க 71 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்தார். தாழ்வான இடங்களான மடிப்பாக்கம், ராம்நகர், வேளச்சேரி பகுதிகளில் 2004ம் ஆண்டுக்கு முன்பு வரை 20 சதவீத வீடுகளே இருந்ததாகவும், தற்போது 80 சதவீதமாக வீடுகள் அதிகரித்துள்ளதாகவும் கூறிய முதலமைச்சர், இதன்காரணமாகவே மழை காலங்களில் பாதிப்பு ஏற்படுவதாகவும் விளக்கமளித்தார்.