புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதல்வருடன் தொலைபேசியில் பிரதமர் மோடி ஆலோசனை
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
வங்கக்கடலில் உருவான ‘புரெவி’ புயலானது, டிச.4-ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி- பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் ‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
“இராமாநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதிகனமழையும், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுவை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்யக்கூடும். நாளை இராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் அதிகனமழை பெய்யும். தரைக்காற்று 45 கிமீ முதல் 55 கிமீ வரையும், இடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என மோடி தெரிவித்துள்ளார்.