தமிழ்நாடு

தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் கடந்த 24-ந்தேதி நிவர் புயல் உருவாகி, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்தது. இதையடுத்து நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. புரெவி புயல், பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. குமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். வட தமிழகத்தில் 4 ஆம் தேதி ஒரு சில இடங்களில் மழை பெய்யும். குமரி, நெல்லை, தென்காசி ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.