இந்தியா

அனைத்து காவல்நிலைய லாக் அப்களிலும் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் லாக் அப்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது

பஞ்சாப் மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்றில் கைதி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. நீதிபதிகள் ஆர்.எஃப்.நரிமன், கே.எம்.ஜோசப், அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் அளித்த உத்தரவில், புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ.,தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, வருவாய் புலனாய்வு துறை, மாநில போலீஸ் நிலையங்கள் ஆகியவற்றில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விசாரணை அறை, லாக் அப் அறை, விசாரணை அலுவலகத்தின் உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக காவல்நிலையங்களில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அறைகள், வரவேற்பு அறை, கைகழுவும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கேமரா பொறுத்த வேண்டியது கட்டாயம் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. பொருத்தப்படும் கேமராக்கள் இரவிலும் பதிவு செய்யும் வகையிலும், ஒலிகளை பதிவு செய்யும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படும் காட்சிகளை 18 மாதங்கள் வரை சேமித்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு சுதந்திரமான அமைப்பின் வாயிலாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளை அடிக்கடி பார்வையிட்டு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் இந்த உத்தரவை நிறைவேற்றுவது குறித்த உரிய காலக்கெடுவை ஆறு வாரங்களுக்குள் தெரிவிக்கும்படியும் கூறியுள்ள உச்சநீதிமன்றம் அரசியல் சட்டப்பரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின்படி சுயபாதுகாப்பு மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் சாத்தான்குளத்தில் கொரோனா ஊரடங்கை மீறியதாக கூறி தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரை அழைத்துச் சென்ற போலீஸார் அடித்துக் கொன்ற வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.