அரசியல்இந்தியா

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் – பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி போடுவதில் மருத்துவத் துறையினர், முன்களப் பணியாளர்கள், முதியோர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா சூழல், அதிலிருந்து மீள்வதற்குத் தடுப்பூசிப் பயன்பாடு ஆகியவை குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

காணொலி வழியாக நடந்த இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நலவாழ்வுத் துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் ஆகியோரும், நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய மோடி, கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி வெற்றிபெறும் என நமது அறிவியலாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

அடுத்த சில வாரங்களில் தடுப்பு மருந்து தயாராகிவிடும் என வல்லுநர்கள் கூறியுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவில் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தடுப்பூசியின் விலை குறித்து மாநில அரசுகளுடன் பேசி வருவதாகவும், மக்களின் நலவாழ்வுக்கு முன்னுரிமை கொடுத்து இதில் முடிவெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதில் இந்தியா ஏற்கனவே அனுபவம் மிக்கது என்றும், எவ்வாறு பகிர்ந்தளிப்பது என மத்திய மாநில அரசுகளின் குழுக்கள் கலந்துபேசி வருவதாகவும் தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத்தும், திமுக சார்பில் டி.ஆர்.பாலுவும் பங்கேற்றனர்.