அரசியல்தமிழ்நாடு

தமிழக அரசை பாராட்ட மனமில்லாமல், அறையில் அமர்ந்துகொண்டு ஸ்டாலின் வசைப்பாடுகிறார் – முதல்வர் பழனிசாமி

தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி மதுரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார் .

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1,295 கோடி ரூபாய் மதிப்பில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் , அதிமுக அரசு அறிவிக்கும் திட்டங்களை, உடனுக்குடன் நிறைவேற்றி வருவதாக கூறினார். எதிர்கட்சிகளின் பார்வையில் கோளாறு உள்ளதால், தமிழக அரசை பாராட்ட மனமில்லாமல், அறையில் அமர்ந்துகொண்டு ஸ்டாலின் வசைப்பாடுகிறார் என குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருகிறது என தெரிவித்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி நிதி ஆதாரங்களை பெருக்கி தருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் விரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கப்படும் என குறிப்பிட்டார். மேலும் மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்யும்போது நான்கு வழிச்சாலையின் கீழே பாலம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் ஜெயலலிதாவின் கனவு எனக்கூறினார். முதல்வர் மீது ஒரு குறையும் சொல்ல முடியாத அளவிற்கு அவர் ஆட்சி நடத்தி வருகிறார் எனக்கூறிய ஓ.பன்னீர்செல்வம், பூட்டிய அறைக்குள் இருந்து ஸ்டாலின் பேசுகிறார் என விமர்சித்தார். முல்லை பெரியாறு அணையை ஜெயலலிதா சட்ட ரீதியாக மீட்டார் எனக்குறிப்பிட்ட துணை முதல்வர், திமுக ஆட்சியில் முல்லை பெரியாறு அணை பிரச்னையை கருணாநிதி முறையாக கையாளவில்லை எனக்கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மீத்தேன் திட்டத்திற்கு கையொப்பமிட்டவர் ஸ்டாலின் எனக்குற்றம்சாட்டிய, ஓ.பன்னீர்செல்வம், மக்கள் மத்தியில் போலி நாடகம் நடத்தும் ஸ்டாலினின் கனவு என்றும் பலிக்காது என தெரிவித்தார் .