விளையாட்டு

ஆஸ்திரேலியா டி20 தொடரிலிருந்து ரவீந்திரா ஜடேஜா காயம் காரணமாக விலகல்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி கான்பீரா ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் 7 விக்கெட்களை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றையப் போட்டியில் இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். இந்திய அணி 161 ரன்கள் எடுக்க ஜடேஜாவின் ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் வீசிய பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக தாக்கியது.

இதனால் நிலைகுலைந்த ஜடேஜா போட்டியிலிருந்து விலகினார். ஜடேஜா காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் சஹால் இந்த போட்டியில் பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா எஞ்சிய 2 டி20 போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த டி20 போட்டி வரும் 6-ம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்