விளையாட்டு

“ஆட்டநாயகன் விருது நடராஜனுக்கே கொடுத்திருக்க வேண்டும்”- ஹர்திக் பாண்ட்யா!

இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய இரண்டாவது டி20 ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடராஜனின் அபாரமான ஆட்டத்தினால் இந்திய ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பாண்ட்யா பேட்டிங்கிலும், நடராஜன் பவுலிங்கிலும் மாஸ் கட்டியிருந்தனர். இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது நடராஜனுக்கே கொடுத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா.

ஆட்டநாயகன் விருதினை பெற்ற பின்னர் அவர் தெரிவித்துள்ளது. “வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நட்டு (நடராஜன்) என்னை கவர்ந்து விட்டார். அதற்கு காரணம் அவர் மிகவும் எளிமையானவர். அதிக மெனக்கெடல் இல்லாமல் சொல்வதை அப்படியே செய்வார். விளையாடும் போது ‘நட்டு யார்க்கர் வீசு’ என்றால் அதை செய்வார். அதே போல வேறு விதமாக பந்து வீசுங்கள் என்றாலும் அதை செய்வார். அதற்கு காரணம் அவரது எளிமை தான். அணியில் நெட் பவுலராக சேர்க்கப்பட்டவர் அணியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயணப்படுத்திக் கொண்டார். எளிமையாக இருப்பது வாழ்வில் நன்மையை தான் சேர்க்கும். நட்டு பலருக்கு முன்னுதாரணமாக நிற்கிறார்” என சொல்லியுள்ளார் பாண்ட்யா.

அதே போல ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் ரசிகர் ஒருவர் ‘ஆளப்போறான் தமிழன்… நடராஜன்’ என்ற பதாகையையும் ஏந்தி இருந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பில் தனது திறனை நிரூபித்து வருகிறார் நடராஜன்.