தமிழ்நாடு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பரவலான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் 16 சென்டி மீட்டர் மழையும், வைப்பாரில் 12 சென்டி மீட்டர் மழையும், கடம்பூரில் 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.