இந்தியா

உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல் : 41 வது இடம் பிடித்தார் நிர்மலா சீதாராமன்!

ஃபோர்ப்ஸின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41 வது இடம் பிடித்துள்ளார். ஹெச்சிஎல் சிஇஓ ரோஷினி நாடார் 55 வது இடத்தில் உள்ளார்.

ஃபோர்ப்ஸின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ், பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா மற்றும் ஹெச்.சி.எல் எண்டர்பிரைஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பட்டியலில் நிர்மலா சீதாராமன் 41 வது இடத்தில் உள்ளார், 2019 ஆம் ஆண்டில் அவர் 34 வது இடத்தில் இருந்தார்.

17 வது வருடமாக ஃபோர்ப்ஸ் பவர் லிஸ்டில் உள்ள பெண்கள் 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள், நான்கு தலைமுறைகளில் பிறந்தவர்கள். இந்த பட்டியலில் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா 55 வது இடத்திலும், மஜும்தார்-ஷா 68 வது இடத்திலும், லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான ரேணுகா ஜக்தியானி 98 வது இடத்திலும் உள்ளனர். ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலோ மேர்க்கல் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது ஆண்டாக இரண்டாவது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 32 வது இடத்திலும், தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் 37 வது இடத்திலும் உள்ளனர். இந்த ஆண்டு பட்டியலில் 17 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர்.