அரசியல்தமிழ்நாடு

”பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும்” – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகதில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .

இன்று சேலம் எடப்பாடித்தொகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, ‘பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறும் போது, “ பொங்கல் பண்டிகை வருவதை யொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும். இந்தத்திட்டம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து தொடங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசி, ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படும்”என்றார்.

முன்னதாக, கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 1000 ரூபாய், துண்டு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகை 2500 ஆகவும், முழு கரும்பாகவும் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.