முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட் வீழ்த்திய அறிமுக வீரர் சிராஜ்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கியுள்ளார். ஷமிக்கு மாற்று வீரர் என்றாலும் ரஞ்சி கிரிக்கெட் மற்றும் இந்திய ஏ அணிக்கான ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியமைக்காக சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மையில் தனது தந்தையை இழந்த சிராஜ் அவரது இறுதி சடங்குகளுக்கு கூட செல்லாமல் ஆஸ்திரேலியாவிலேயே அணியுடன் இருந்து விட்டார். இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக நங்கூரமிட்டு விளையாடிக் கொண்டிருந்த மார்னஸ் லபுஷேனை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை எடுத்துள்ளார்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மார்னஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கெட்டியாக பிடித்தது மற்றொரு அறிமுக வீரரான சுப்மன் கில். இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என உறுதி ஏற்றிருந்தார் சிராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் லபுஷேன் மற்றும் கேமரூன் கிரீன் என இரண்டு விக்கெட்டுகளை சிராஜ் இதுவரை வீழ்த்தியுள்ளார்.