உலகம்

ஹெச்1 பி விசா மீதான தடை நீட்டிப்பு – அதிபர் டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் தங்கி பணியாற்றுவதற்காக வழங்கப்படும் ஹெச்1 பி விசா மீதான தடையை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்நாட்டு மக்களின் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஹெச்1 பி மற்றும் இதர பணிகளுக்கு வழங்கப்படும் விசாக்கள் மீது கடந்தாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப துறை மற்றும் இதர தொழில்நுட்ப பணியாளர்கள் அமெரிக்கா செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஹெச்1 பி விசா மற்றும் பல்வேறு பணிக்கான விசாக்கள் மீதான தடையை 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து கடந்தாண்டு ஜூனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். மேலும் ஹெச்.1 பி விசாக்கள் மீதான தடையை அதிபர் டிரம்ப் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார்.

புது வருடத்திலாவது அமெரிக்கா சென்றுவிடலாம் என்ற கனவோடு காத்திருந்த இந்தியா்களுக்கு, இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கத்திலிருந்து தொழில் நிறுவனங்களும், மக்களும் இன்னும் முழுமையாக மீளாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். ஏனென்றால் கடந்தாண்டு ஏப்ரலுக்கு முன்பாக இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட ஹெச்.1பி விசா காலாவதி ஆகும் நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் விசாக்களை மார்ச் 31ஆம் தேதி வரை புதுப்பிக்க இயலாத நிலை உள்ளதால் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில்தான் அதிக பணியாளர்கள் ஹெச்1 பி விசாக்களுக்கு விண்ணப்பிக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் ஹெச்.1பி உள்ளிட்ட விசாக்களுக்கு விண்ணப்பிக்கின்றனர்.அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனாவது, ஹெச்.1 பி விசா விவகாரத்தில் இந்தியர்களுக்கு கருணை காட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.