“ஸ்டாலினால் முதல்வராக வரவே முடியாது” – மு.க.அழகிரி
மதுரையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்திய மு.க.அழகிரி, “ ஸ்டாலினால் முதல்வராக வரவே முடியாது” என தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் பேசியதாவது, கலைஞரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள். சதிகாரர்களையும், துரோகிகளையும் எதிர்ப்பதற்கான முதல்படிக்கட்டு இந்தக் கூட்டம். திருமங்கலம் என்றாலே இந்தியாவே பயப்படுகிறது. திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்குமாறு மு.க.ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் மன்றாடினர். திருமங்கலத்தில் பணம் கொடுத்து வென்றதாக பலரும் கூறினார்கள். ஆனால் கடும் உழைப்பால் வென்றோம் என்றார் .
கலைஞர் தொடர்ந்து கேட்டுக் கொள்ளவே, திருமங்கலம் தேர்தலில் நாம் பணியாற்றி 40,000 ஓட்டு வித்தியாசத்தில் வென்றோம். பதவியை எதிர்பார்த்து என்றுமே திமுகவில் இருந்ததில்லை. மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்றேன், ஆனால் வலுக்கட்டாயமாக கலைஞர் எனக்கு கொடுத்தார்.
ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை கலைஞரிடம் இருந்து பெற்றுத் தந்தேன். மு.க.ஸ்டாலின் எனக்கு ஏன் துரோகம் செய்தார் எனத் தெரியவில்லை. கலைஞருக்குப் பிறகு நீதான் தலைவர் என ஸ்டாலினிடம் நான் கூறினேன். நான் என்ன தவறு செய்தேன். ஸ்டாலினால் முதல்வராக வரவே முடியாது.
விரைவில் முடிவை அறிவிப்பேன். அது நல்ல முடிவாக இருந்தாலும், கெட்ட முடிவாக இருந்தாலும் அதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”என்றார்.