குற்றம்

பொது இடங்களில் ஆபாச கேள்வி கேட்டு தொல்லை செய்த யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது!

யூடியூப் சேனலுக்காக பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த மூன்று பேரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் யூடியூப் சேனலில் பெண்களிடம் ஆபாசமாக பேசி எடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், அதே யூடியூப் சேனலைச் சேர்ந்த சிலர் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் பெண்களிடம் விரட்டி விரட்டி சென்று ஆபாசமான கேள்விகளை கேட்டு பதில் கூற தொல்லை தருவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. பெசன்ட் நகர் கடற்கரையில் கடை நடத்தி வரும் பெண் வியாபாரி ஒருவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, விரைந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார் பேட்டி எடுத்த இளைஞர், கேமராமேன் ஆகியோரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கேமராவில் பெண்களின் அனுமதி இல்லாமல் தொல்லை செய்தும், விரட்டி விரட்டி ஆபாசமாக கேள்வி கேட்பது போன்று காட்சிகள் பதிவாகியிருந்தது.

பொது இடத்தில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக யூடியூப் சேனலை சேர்ந்த நிகழ்ச்சி தொடர்பாளர் அசென் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல், ஆபாசமாக பேசுதல், உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.